×

வெள்ளவேடு போலீஸ் நிலையம் அருகே பறிமுதல் வாகனங்களால் விஷப்பூச்சிகள் தொல்லை

திருவள்ளூர், நவ. 22: திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு போலீஸ் நிலையம் அருகே பறிமுதல் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் அதை சுற்றிலும் புதர் ண்டிக்கிடப்பதோடு பாம்புகள் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் போலீசார் அச்சத்தில் உள்ளனர்.திருவள்ளூர் அடுத்த மேல்மணம்பேடு பகுதியில் உள்ளது வெள்ளவேடு போலீஸ் நிலையம். இதன் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், மணல் கடத்தல் மற்றும் விபத்து வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார், அதை கொண்டு வந்து போலீஸ் நிலையம் அருகே காலியாக உள்ள பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.இந்த வாகனங்கள் பல மாதங்களாக ஒரே இடத்தில் உள்ளதால் அதை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் ஏராளமான பாம்புகள் குடி புகுந்துள்ளன. இந்த பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதால் பொதுமக்களும், போலீஸ் நிலையத்துக்குள் புகுவதால் போலீசாரும் அச்சத்தில் உள்ளனர்.

போலீஸ் நிலையத்தை சுத்தமாக சுகாதாரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரே இதுபோல் பறிமுதல் வாகனங்களை நிறுத்தி சுகாதாரமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர். குழந்தைகளும் தெருவில் விளையாட முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.மேலும், பறிமுதல் வாகனங்களில் தேங்கி நிற்கும் சுத்தமான மழைநீரில் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கும், போலீசாருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அகற்ற மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : police station ,Wellaveda ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...