×

அங்கன்வாடிகளுக்கு கெட்டுபோன முட்டை விநியோகம்

திருப்பூர்,நவ.22: திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே அங்கன்வாடிமைய குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்த முட்டைகள் கெட்டுப்போயிருந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த அவினாசிக்கவுண்டம்பாளைத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. அங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள அங்கேரிபாளையம் அங்கன்வாடி மையத்தில் கட்டிட சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் அந்த மையத்தை சேர்ந்த குழந்தைகளும் அவினாசிக்கவுண்டம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கன்வாடி மையங்களில் வாரத்தில் திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்குவது வழக்கம். நேற்று வழக்கம்போல அங்கன்வாடி மைய சத்துணவு ஊழியர் குழந்தைகளுக்கான முட்டைகளை வேக வைப்பதற்கு முன்பு தண்ணீரில் போட்டு கழுவினார். அப்போது முட்டைகள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தன. இதையடுத்து அந்த முட்டைகளை எடுத்து பார்த்தபோது அவை அனைத்தும் கெட்டுப்போனது தெரிய வந்தது.

மேலும் அந்த மையத்திற்கு கடைசியாக கொண்டு வரப்பட்ட 600 முட்டைகளும் கெட்டுப்போயிருந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அந்த முட்டைகள் அனைத்தும் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. முட்டைகள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டதால் நேற்று மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முட்டைகள் வழங்கப்படவில்லை. சரியான நேரத்தில் சத்துணவு ஊழியர் கெட்டுப்போன முட்டைகளை பார்த்து கண்டுபிடித்ததால் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டைகள் வழங்க இருந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் தக்க நேரத்தில் கண்டறியப்பட்டதால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


Tags : Anganwadis ,
× RELATED அங்கன்வாடி குழந்தைகள் விவரங்களை...