×

சாலையை சீரமைக்க வலியுறுத்தி திமுகவினர் மறியல்

பூதப்பாண்டி, நவ.20: குடிநீர் திட்டப்பணிகளால் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி திட்டுவிளையில் திமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். நாகர்கோவிலில் இருந்து தடிக்காரன்கோணம் செல்லும் சாலையில் குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றன. எனவே இந்த சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் திட்டுவிளை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று காலை நடந்தது. ஆஸ்டின் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. இதனால் சாலையில் இரு பக்கமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.

போராட்டத்தில் ஆஸ்டின் எம்எல்ஏ ேபசுகையில், சேதப்படுத்தப்பட்டுள்ள இந்த சாலையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 3 பேர் இறந்துள்ளனர். எனவே பணியை விரைந்து முடித்து சாலையை செப்பனிட வேண்டும் என்றார். தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பூதப்பாண்டி பேரூர் திமுக செயலாளர் ஆலிவர்தாஸ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சந்திரசேகரன், முன்னாள் ஒன்றிய தலைவர் பூதலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.தகவல் அறிந்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் கிருஷ்ணகுமார், அசோக், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கோபாலகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் வந்து எம்எல்ஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தற்போது பள்ளமாக கிடக்கும் பகுதிகளை 2 நாளில் சீரமைக்க வேண்டும். சாலையை தோண்டி குழாய் பதிக்கப்பட்டுள்ள பகுதியில் பாதி தூரத்தை வரும் டிசம்பர் 30ம் தேதிக்குள் சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் அதை ஏற்று பணி மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து திமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அப்போது அவர்கள், அதிகாரிகள் உறுதி அளித்தபடி சீரமைக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து ஒன்றரை மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags : Dikkavinar ,road ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...