உரிமையியல் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வு நடைபெறும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு தடையில்லா மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு

தஞ்சை, நவ. 20: தஞ்சையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வு நடைெபறும் மையத்தில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். அப்போது மையத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தஞ்சை பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வு 24 ம் தேதி நடக்கிறது. இதையடுத்து கலெக்டர் கோவிந்தராவ், தேர்வு நடைபெறும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உரிமையியல் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வில் 400 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வர்களுக்கு போதுமான மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தேர்வு மையங்களின் அறைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து இயக்கத்தில் உள்ளதையும், தேர்வு நிகழ்வுகள் பதிவு செய்யப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார். தஞ்சை டிஆர்ஓ சக்திவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி (பொது), வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, தஞ்சை தாசில்தார் வெங்கடேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>