×

தென்னை மரங்களுக்கு வேர் நுண்ணூட்ட டானிக்

கூடலூர். நவ. 20: தென்னை மரங்களுக்கு வேர் நுண்ணூட்ட டானிக் கொடுப்பது குறித்து மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், கம்பம் துணை வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னையில் குரும்பை உதிர்வை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதையடுத்து குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தினகரன் தோட்டத்தில் உள்ள சுமார் ஆயிரம் தென்னை மரங்களுக்கு வேர் நுண்ணூட்ட டானிக் அளித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு மாணவர்கள் ஜஸ்வந்த், சூர்யா, உதயகுமார், சுப்ரமணி, சந்தோஷ், சிவகுமார், வீரமணி, தாமரைக் கண்ணன் மற்றும் அஜய் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

குரும்பை உதிர்வு கண்டறியப்பட்ட தென்னைக்கு 3 அடி தள்ளி 1 அடி ஆழத்தில் குழி தோண்டி பென்சில் தடிமன் அளவு உள்ள, வளரும் வெள்ளை கலந்த இளம் பழுப்பு நிற வேரை தெரிவு செய்து சாய்வாக நறுக்க வேண்டும். பின்பு 200 மில்லி வேர் நுண்ணூட்ட டானிக் பாக்கெட்டை எடுத்து, வேரின் வெட்டப்பட்ட நுணி பாக்கெட்டின் அடி வரை செல்லுமாறு நுழைத்து காற்று புகா வண்ணம் இறுக்கமாக கட்ட வேண்டும். பிறகு லேசாக மண்ணால் மூட வேண்டும். மண்ணில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது டானிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை வேர் டானிக் கொடுக்கப்பட வேண்டும் என விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா