×

அரசின் அலட்சியத்தால் போலீஸ் ரெக்கவரி வாகன பதிவு எண்ணுக்கு தாமதக் கட்டணம்

தேனி, நவ. 20:அரசின் அலட்சியம் காரணமாக காவல்துறைக்கு வழங்கப்பட்ட வாகன பறிமுதல் வாகன பதிவு எண் பெற தாமதக் கட்டணமாக ரூ.1.16 லட்சம் செலுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.  புதிய மோட்டார் வாகனங்கள் வாங்கும் போது, அத்தகைய வாகனங்களுக்கு வட்டார   போக்குவரத்து அலுவலகம் மூலம் வாகனத்திற்கென புதிய பதிவு எண் வாங்க வேண்டியது கட்டாயம். இந்த பதிவு எண்ணே அந்த வாகனம் இருக்கும்வரை உயிரோட்டமாக கருதப்படுகிறது. இத்தகைய புதிய இருசக்கர வாகனங்கள் முதல் மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கரவாகனங்கள், லாரிகள், புல்டோசர்கள், ஜேசிபி இயந்திரங்கள், வாகனங்களை பறிமுதல் செய்து கொண்டு செல்லும் ரெக்கவரி வாகனங்கள், கிரேன்கள் அனைத்துக்கும் புதிய வாகன பதிவு எண் பெற வேண்டியது அவசியம்.

அதன்படி, அரசு எந்தத் துறைக்கு புதிய வாகனங்களை வழங்கும்போதும், ஒரு மாத காலத்திற்குள் அந்த வாகனத்திற்கு புதிய பதிவு எண்ணை அந்த மாவட்டத்திற்கான வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெறவேண்டும். கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் காவல்துறைக்கென ரெக்கவரி வாகனங்களை வாங்கியது. இந்த வாகனங்களை வாங்கி அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்குவதில் காலதாமதம் செய்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தற்போது இந்த ரெக்கவரி வாகனங்கள் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது.
ரெக்கவரி வாகனங்கள் பயன்பாட்டுக்காக கொள்முதல் செய்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவு எண் வாங்க வேண்டும் என்ற நிலையில் தற்போது 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலை ஆகிவிட்டது.

தேனி மாவட்டத்திற்காக வழங்கப்பட்ட காவல்துறை ரெக்கவரி வாகனத்தை பதிவு எண் பெறுவதற்காக நேற்று தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வரப்பட்டு, பதிவு எண்ணுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் இவ்வாகனம் வந்து 2 ஆண்டுகளுக்கும் மேலானதால், தாமதக்கட்டணம் ரூ.1.16 லட்சம் கட்டவேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதேபோலத்தான் தமிழகம் முழுவதும் தமிழக அரசின் அலட்சியத்தால் அந்தந்த மாவட்டங்களுக்கு ரெக்கவரி வாகனங்கள் தாமதமாக வழங்கப்பட்டதால் பதிவு எண் பெற தாமதக்கட்டணம் கட்ட வேண்டிய அவலநிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது