×

ஆர்ப்பரிக்கும் சுருளி அருவி 18ம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தேவாரம், நவ. 20: 18ம் கால்வாய் நீட்டிப்பு கால்வாய்களுக்கு தேனி கலெக்டர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார். கம்பம் பள்ளத்தாக்கில் மழைவளம் அதிகம் இல்லாத தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிலும் உள்ள 44 கண்மாய்கள் பயன்பெறும் வகையில் 18ம் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும்போது தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த வருடம் 18ம் கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தேவாரத்தை சுற்றிலும் உள்ள கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் போடி, உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 18ம் கால்வாய் போடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு கால்வாய் வெட்டப்பட்டது. இதன் வழியே தண்ணீர் திறக்கப்பட்டால் உத்தமபாளையம் தாலுகாவில் பொட்டிப்புரம் பகுதிகளுக்கும், போடி தாலுகாவில் ராசிங்காபுரம், சிலமலை, மேலச்சொக்கநாதபுரம், போடி பகுதிகளில் உள்ள குளங்களும், கண்மாய்களும் நிரம்புவதுடன், நிலச்செரிவூட்டல் திட்டத்தின் கீழ் இந்த பகுதிகளில் உள்ள சுமார் 585 தோட்ட கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்கும். எனவே பதினெட்டாம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து நேற்று காலை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்து கொண்டு விநாடிக்கு 95 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்தார். இதன் மூலம் போடி, உத்தமபாளையம் தாலுகாவில் மொத்தம் 4,794 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். நிகழ்ச்சியில் 18ம் கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் ராமராஜ், விவசாயிகள் காளிமுத்து, ஆசைதம்பி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறுகையில், ‘18ம் கால்வாய் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே விவசாயிகள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி கொள்ளவேண்டுகிறேன்’ என்றார்.

Tags : Opening ,extension areas ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா