×

தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதுகுளத்தூர் நிலவள வங்கிக்கு விருது

சாயல்குடி, நவ. 20:  கூட்டுறவு துறையில் முதுகுளத்தூர் நிலவள வங்கி தொடர்ந்து 10வது ஆண்டாக சாதனை விருது பெற்றுள்ளது. கூட்டுறவு துறை சார்பில் 66வது கூட்டுறவு வார விழா ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கி சார்பாக 463 பயனாளிகளுக்கு ரூ.15.85 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ சதன்பிரபாகர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன் வரவேற்றார்.

மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய நான்கு இடங்களில் நிலவள வங்கி இயங்கி வருகிறது. இதில் சிறப்பான சேவை, சிறந்த நிர்வாக திறன், அதிக வருவாய் ஈட்டியதற்காக தொடர்ந்த 9 ஆண்டுகளாக சாதனை விருது வழங்கப்பட்டது. இந்தாண்டு 10வது முறையாக அந்த வங்கி தலைவர் தர்மர், செயலாளர் திருப்பதி, மேற்பார்வையாளர்கள் சரவணன், சுந்தரம் ஆகியோரிடம் சாதனை விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் வீரராகவராவ் பேசும்போது, ‘மாவட்டத்தில் 181 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குதல், உரம், வேளாண் இடுபொருள் வழங்குதல், வறட்சி நிவாரணம் வழங்குதல் மற்றும் 20 சதவீத தள்ளுபடியுடன் மருந்தகங்களில் மருந்துகள் விற்கப்படுகிறது.

2018-19ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு இழப்பீடு தொகை 121 வருவாய் கிராமங்களுக்கு ரூ.175கோடி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.100 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் 384.41 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாய பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 5974 மெட்ரிக் டன் யூரியா உள்ளிட்ட உரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப வழங்குவதற்கு 1090 மெட்ரிக் டன் உரங்கள் கையிருப்பு உள்ளன’ என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை தலைவர் முருகேசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், பனைவெல்ல கூட்டுறவு சங்கத் தலைவர் பாலசிங்கம் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை