×

ஆசிரியர் பணிமாறுதலை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டம் திருமங்கலம் அருகே பரபரப்பு

திருமங்கலம், நவ. 20:திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 62 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமையாசிரியராக ரம்ஜான்பேகமும், ஆசிரியர்களாக அகிலா பிரேமலதா, கலா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆசிரியை அகிலா பிரேமலதா இப்பள்ளியில் கடந்த 19 ஆண்டுகளாக பணியில் உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மற்றொரு ஆசிரியையான கலா பயிற்சி வகுப்பிற்காக வெளியூர் சென்று விட்டார். அவரது வகுப்புகளையும் சேர்த்து அகிலா பிரேமலதா பார்த்து வந்துள்ளார். இதில் வகுப்புகள் எடுப்பதில் தலைமையாசிரியர் ரம்ஜான்பேகத்திற்கும் அவருக்கு பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.. இப்பிரச்னை கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதனை தொடர்ந்து திடீரென நேற்று முன்தினம் ஆசிரியை அகிலா பிரேமலதாவை போல்நாயக்கன்பட்டி தொடக்கப்பள்ளிக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.

இது மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கியது. நேற்று முன்தினமே சில மாணவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். இந்நிலையில் தொடர்ந்து நேற்று காலை பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிமாறுதல் செய்யப்பட்ட  அகிலா பிரேமலதா போடிநாயக்கன்பட்டி பள்ளியில் நேற்று பணிக்கு சேர்ந்தார். தகவலறிந்ததும் திருமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சாந்தி வாகைக்குளம் பள்ளிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘ஆசிரியை அகிலா பிரேமலதா நன்றாக பாடங்களை நடத்துவார். ஆசிரியர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் அவரை திடீரென பணிமாறுதல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீண்டும் எங்கள் கிராம பள்ளியில் பணியாற்ற வேண்டும். இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். டிசி வாங்கி விடுவோம்’ என்றனர்.

Tags : Thirumangalam ,school ,children ,
× RELATED திருமங்கலத்தில் மழை: 3 வீடுகள் இடிந்தன