×

ஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் புறக்கணிப்பு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு

ஒட்டன்சத்திரம், நவ.20: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டிரைவிங் ஸ்கூல் சென்று விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, ஆன்லைனில் விண்ணப்பம் செய்தவர்களை புறக்கணிப்பதால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்-பழநி ரோட்டில் உள்ளது வட்டார போக்குவரத்து அலுவலகம். ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் ஓட்டுனர் உரிமம் தகுதிச்சான்று, புதிய வாகன பதிவு என பல்வேறு சான்றிதழ்களை பதிவு செய்து வருகின்றனர்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் சென்று விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அங்கு விண்ணப்பம் செய்தால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை ஓட்டுனர் உரிமத்திற்கு வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தால் ரூபாய் ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர் தனியார் ஓட்டுனர் பள்ளிகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அனைத்து சான்றிதழ்களையும் உடனுக்குடன் வழங்கி வருவதாகவும், ஆனால் ஆன்லைனில் நேரடியாக பதிபவர்களை பல நாட்கள் கழித்து வாருங்கள் என அலைக்கழிப்பு செய்வதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதன் காரணமாக ஏழை எளிய ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலர் இல்லாததால் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டு, பொதுமக்கள் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே மண்டல போக்குவரத்து அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஒட்டன்சத்திரத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலரை நியமித்து முறைகேடுகளை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Regional Transport Office ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...