×

கொடைக்கானல் பகுதியிலேயே முதன்முறையாக நடந்த விவசாயிகள் குறைதீர் முகாம்

கொடைக்கானல். நவ. 19: கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமிற்கு கொடைக்கானல் ஆர்டிஓ சுரேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகள் சென்று கலந்துகொள்ள முடியாத காரணத்தினால் முதல்முறையாக கொடைக்கானல் பகுதியிலேயே விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

இம்முகாமில் தரமான விதைகள் மற்றும் இடுபொருட்களை வழங்க வேண்டும் என்றும், மேல் மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் விவசாயிகளுக்கு போதிய பாசன வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அரசின் நலத்திட்ட உதவிகளை சிறு, குறு விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. குண்டு பகுதியில் சிறப்பாக முட்டைகோஸ் விவசாயம் செய்த சரோஜா என்ற விவசாயிக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. முகாமில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : farmers camp ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்