×

துவங்கியது ஐயப்ப பக்தர்கள் சீசன் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு அலறுது பழநி

பழநி, நவ.20: ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்கி உள்ள நிலையில் பழநி நகரில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். கார்த்திகை மாதம் துவங்கி உள்ளதால் இக்கோயில் உள்ள பழநி நகருக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோர் பழநி கோயிலுக்கும் வந்து செல்கின்றனர்.
இதனால் தை மாதம் வரை பழநி நகரில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகளவு இருக்கும். அதன்பிறகு தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் கோடை விடுமுறை என வைகாசி மாதம் வரை பக்தர்கள் கூட்டத்திற்கு குறைவிருக்காது.

இவ்வாறு வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக பழநி கோயில் உள்ள அடிவாரப்பகுதியில் கிரிவீதி, சன்னதிவீதி, அருள்ஜோதி வீதி, இடும்பன் இட்டேரி சாலை மற்றும் அய்யம்புள்ளி சாலைகளில் ஏராளமான தற்காலிக கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாலையோரத்தில் உள்ள கடைகள் தங்களின் கடைகளின் நீளத்தை ரோட்டின் பெரும்பகுதியை விழுங்கி சாக்கடையே தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்துவிட்டனர். இதன்பிறகு  தள்ளுவண்டி கடைக்காரர்கள் 2வது அடுக்காக சாலையை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.

இதன்பிறகு வடமாநில வியாபாரிகள் சாலையின் நடுவில் நின்று கொண்டு தங்களது பொருட்களை வாங்க வலியுறுத்தி பக்தர்களை தொந்தரவு செய்கின்றனர். இதுபோன்ற தொடர் ஆக்கிரமிப்புகளால் பழநி கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நிம்மதியாக சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நடைபாதை வியாபாரிகளுக்கு அவர்களது வாழ்வாதாரம் பாதிப்படையாத வகையில் மாற்று இடம் ஒதுக்கித்தந்து பழநிக்கு வரும் பக்தர்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாட வழிவகை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : season devotees ,devotees ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...