×

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ ஆகார்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை

பட்டிவீரன்பட்டி, நவ. 20: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் உள்ள சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீஆகார்ஷண பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம், விபூதி உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன்பின்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆகார்ஷண பைரவரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டி குடைமிளகாய் தீபம், எலுமிச்சை தீபம், தேங்காய் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகளும், ஊர்பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர்.

இதேபோல் பட்டிவீரன்பட்டி சாவடிபஜாரில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நத்தம்: நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் உட்பிரகாரத்தில் அமைந்திருக்கும் காலபைரவர் சன்னதியில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. இதையொட்டி சன்னதி முன்பாக மாவிலை, பூமாலை, தேங்காய் பழங்கள் வைத்து 9 கலசங்களுக்கும் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதையொட்டி சுற்றுவட்டாரம், வெளிமாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Sri Aksharana Bhairava ,Tebirupa Ashtami ,
× RELATED ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்