புகார் கொடுக்க 20 கி.மீ. தூரம் ெசல்வதை தவிர்க்க போலீஸ் நிலையங்களின் எல்லைகளை மறு சீரமைப்பு செய்ய கோரிக்கை

திருவள்ளூர், நவ. 20: திருவள்ளூர் மாவட்டத்தில் 25 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 5 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், 5 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், 5 மதுவிலக்கு அமல் பிரிவு நிலையங்கள், 5 போலீஸ் சப்-டிவிஷன் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

மாவட்ட எஸ்.பி., தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி.,க்கள், 11 டி.எஸ்.பி.,க்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள கிராமங்களை எல்லைகளாக பிரித்து சுமார் 20 கிராமங்களுக்கு ஒரு போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் நடக்கும் குற்றங்கள் குறித்து மக்கள் புகார் கொடுத்தால் போலீசார் விசாரணை செய்கின்றனர். ஆங்கிலேயேர்கள் காலத்தில் துவங்கிய சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலைய கிராம எல்லை வரையறை, முறையாக வரையறுக்கப்படாமல் தாறுமாறாக உள்ளது.

அதாவது, ஒரு போலீஸ் நிலையத்திற்கு, 3 கி.மீ., தூரத்தில் உள்ள கிராமம், சுமார் 20 கி.மீ., தூரத்தில் உள்ள மற்றொரு போலீஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், குற்ற சம்பவங்கள் ஏற்படும்போது, அருகில் உள்ள போலீசில் புகார் கொடுக்காமல் நீண்ட தூரத்தில் உள்ள நிலையத்துக்கு மக்கள் செல்லும் நிலை உள்ளது. அந்த பகுதியில் நடக்கும் விபத்து, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை விசாரிக்க போலீசார் நீண்ட தூரம் செல்லும் அவல நிலையும் உள்ளஇதனால், குற்றங்களை விசாரிக்க போலீசாரும், புகார் கொடுக்க பொது மக்களும் அவதியடைகின்றனர். போலீஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள கிராமங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நிலையங்களில் இணைத்தால், குற்ற சம்பவங்களை தடுக்கவும், புகார்கள் மீது உரிய நேரத்தில் விசாரணை நடத்தவும் ஏதுவாக இருக்கும். எனவே, மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களின் எல்லைகளை மறு சீரமைப்பு செய்வதற்கு, மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் அரசிற்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>