×

திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு 8 மணி நேரம் காத்திருக்கும் மக்கள்

திருவள்ளூர், நவ. 20: திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவுக்கு 8 மணி நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது எனவும், லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். திருவள்ளூர் ஜெ.என். சாலையில் தாலுகா அலுவலக வளாகத்தின் பின்புறம் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நில பத்திரம், திருமணம், உயில், வில்லங்க சான்று, பத்திர நகல் உள்ளிட்டவைக்காக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கடந்த 4 மாதங்களாக இந்த அலுவலகத்தில் சார் பதிவாளர் பதவி காலியாக உள்ளது. இதனால், அந்த பணியை இணை சார்பதிவாளர் கவனித்து வருகிறார். தினமும் காலை 10 மணிக்கு அலுவலகம் வரவேண்டிய இவர், காலதாமதமாக 11 மணிக்கு மேல்தான் பணிக்கு வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு நடந்து வருகிறது.  இதனால், தினமும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.

இந்த இணை சார் பதிவாளருக்கு போதுமான கம்ப்யூட்டர் அனுபவம் இல்லாததால் ஒரு பத்திரப்பதிவுக்கே சுமார் ஒரு மணி நேரமாகிறது. கேட்டால் ‘பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள சர்வர் பழுதாகியுள்ளது. அதனால், காலதாமதம் ஆகத்தான் செய்யும்’’ என பதிலளிக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு, சுமார் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இங்கு எங்களது குறைகளை தெரிவிக்க சார் பதிவாளரும் பணியில் இல்லை. சில மாதங்களுக்கு முன் அவரை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டனர். அதேபோல், வில்லங்கம் மற்றும் நகல் எடுத்து கொடுக்கும் ஊழியர்கள், மதியத்துக்கு மேல் அலுவலகத்தில் இருப்பதில்லை. வில்லங்க சான்றிதழுக்கு மனு செய்தால் 15 நாட்கள் அவகாசம் தருகின்றனர்.

அதே நேரத்தில், இங்குள்ள ஊழியர்களுக்கு பணம் கொடுத்தால், சில மணி நேரத்தில் சான்றிதழ் கிடைத்து விடுகிறது. இதுபோன்ற முறைகேடுகள் அதிகளவில் உள்ளது. இங்கு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான இடவசதி இல்லை. இரவு ஆனாலும், இருளில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்த அலுவலகத்தில் சார் பதிவாளரை நியமித்து, பொதுமக்களின் குறைகளை நீக்க வேண்டும். பத்திரப்பதிவு பணியை எளிமையாக்க வேண்டும். லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வேண்டும்’’ என்றனர்.

Tags : Office ,Tiruvallur Sir Registrar ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...