×

தார் சாலை அமைப்பதற்கு முட்டுக்கட்டை வனத்துறைக்கு எதிராக கிராமத்தினர் உண்ணாவிரதம்

புழல், நவ.20: சோழவரம் அருகே எருமைவெட்டி பாளையத்தில் வனத்துறையினரின் தடையால் சாலை போடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உண்ணாவிரதம், சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சோழவரம் ஒன்றியம் காரனோடை அடுத்த புதிய எருமைவெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம் ஆகிய இரண்டு ஊராட்சிகள் உள்ளன.  இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். காரனோடை ஜி.என்.டி. சாலையில் இருந்து ஆத்தூர், பழைய எருமைவெட்டிப்பாளையம், புதிய எருமைவெட்டிப்பாளையம் வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் மாநில நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் சாலை உள்ளது. இதில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை வனத்துறைக்கு சொந்தமானது. கடந்த 2014ம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலை போடப்பட்டது. அப்போது வனத்துறைக்கு சொந்தமான இரண்டு கிலோமீட்டர் தூர சாலையை தார்சாலையாக மாற்ற வனத்துறையினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இதுநாள் வரை தார் சாலை அமைக்கப்பட வில்லை.  குண்டும் குழியுமான அப்பகுதி மண் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கும் குறிப்பாக தமிழக முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அளித்தும் இதுநாள் வரை மண் சாலையை தார் சாலையாக மாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் இந்த சாலை வழியாகச் செல்லும் மாநகர பஸ்கள் 57 எச், 114 ஈ உள்ளிட்ட மூன்று மாநகர பஸ்கள் பள்ளங்களில் ஏறி இறங்கும்போது பழுதாகி நின்று விடுகிறது. இதனால் அதில் பயணிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.  இரவு நேரங்களில் பொதுமக்கள் இருட்டான பகுதியில் தங்களுடைய பகுதிக்கு நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.  இந்த தெரு மின் விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் அந்த சாலையில் நடந்து செல்பவர்களிடம் கத்திமுனையில் மிரட்டி பணம், செல்போன் மற்றும் நகைகளை பறிக்கின்றனர். அத்துடன் தனியாக செல்லும் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை 10 மணி அளவில் சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதிகாரிகள் மதியம் ஒரு மணி வரை வராததை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த 300 பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் சோழவரம் ஜி.என்.டி சாலையில் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாதாவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் சம்பவ இடத்திற்கு வந்தார் உண்ணாவிரதத்தில் இருந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் அங்கிருந்த பொன்னேரி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் டில்லி பாபுவிடமும்  பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடமும் குறிப்பாக வனத்துறை அதிகாரிகளிடமும் விரைவில் பேசி சாலை போடுவதற்கான பணிகளை செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.இதனால் மூன்று மணிவரை நடைபெற்ற உண்ணாவிரதம் கைவிடப்பட்டு அனைவரும்  கலைந்து சென்றனர்.
பின்னர் மாதவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எருமைவெட்டிப்பாளையம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகளை அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் மூன்று முறை பேசியிருக்கிறேன். அப்போது அந்தத் துறை அமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி மூன்றரை ஆண்டுகள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் சாலை போடும் பணி நடைபெறவில்லையெனில் விரைவில் மக்களை திரட்டி அறப்போராட்டம் நடத்துவோம் என்றார்.

Tags : tar road ,
× RELATED தோகைமலை அருகே தார் சாலையை...