உத்திரமேரூர் அருகே அரசாணிமங்கலம் கிராமத்தில் 3 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் நூலகம்

உத்திரமேரூர், நவ. 20: உத்திரமேரூர் அடுத்த அரசாணிகடந்த 3 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் நூலகத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007ம் ஆண்டு புதிதாக நூலகம் திறக்கப்பட்டது.இங்கு பல தரப்பட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும், தினசரி நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்தனர்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்த நூலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் நூலகத்தை சுற்றி முற்செடிகள் வளர்ந்து, புதர்மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. மேலும், நூலக கட்டிடத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள புத்தகங்களில் புழுதி படிந்து பாழாகி வருகிறது.

இதனால் இந்த நூலகத்தை திறந்து வைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என கிராம மக்கள், பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், நூலகத்தை சுற்றியுள்ள புதர்களில் இருந்து விஷப்பூச்சிகள் அருகில் உள்ள குடியிருப்புகளில் நுழைவதால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

குறிப்பாக, நூலகம் செயல்படாமல் பூட்டியே கிடப்பதால், கிராமத்தில் உள்ள இளைஞர்கள், மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பூட்டப்பட்டுள்ள நூலகத்தை திறந்து, சீரமைத்து உரிய பராமரிப்புடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>