×

சாலையில் புழுதி பறப்பதால் பொதுமக்கள் ஆத்திரம் கல்குவாரி லாரிகளை சிறை பிடித்து சாலை மறியல்

உத்திரமேரூர், நவ. 20: வேகமாக சென்று சாலையில் புழுதி பறப்பதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கல்குவாரி லாரிகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் உத்திரமேரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திரமேரூர் அடுத்த அருங்குன்றம், மதூர், பொற்பந்தல், சிறுதாமூர், பினாயூர், பழவேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல தனியார் கல்குவாரிகளும், கல் அறவை தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. இந்த கல் குவாரிகளுக்கும், கல் அறவை தொழிற்சாலைகளுக்கும் சென்று வரும் லாரிகள் அருங்குன்றம், பழவேரி கிராமப்புற சாலை வழியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருவதால், சாலை பழுதடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் தோன்றி குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும், அசுர வேகத்தில் லாரிகள் செல்வதால், சாலையில் உள்ள புழுதிகள் பறந்து, பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். இதில் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் எதிரில் வரும் வாகனம் தெரியாமல் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து சம்பவங்களும் நடக்கின்றன. மேலும், இந்த புழுதியால் கிராம மக்களுக்கு சுவாச கோளாறு உள்பட பல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாய நிலத்தில் பயிரிடும் பயிர்களில் புழுதி முழுவதும் படிவதால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. வீடுகளில் சமைத்து வைத்துள்ள உணவு பொருட்களிலும், புழுதி படிந்து பாழாகிறது. இதுபற்றி பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அருங்குன்றம், திருமுக்கூடல் சாலையில் கல்குவாரி லாரிகள் புழுதிகள் பறக்கும்படி வேகமாக சென்றன. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலையில் திரண்டு அவ்வழியாக வந்த லாரிகளை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,jungle ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...