கெலமங்கலத்தில் இன்று அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கிருஷ்ணகிரி, நவ.20: கெலமங்கலத்தில், அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று(20ம் தேதி) நடைபெறுகிறது.  இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளர் துறையின் கூட்டு முயற்சியில் கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் உள்பட பல்வேறு அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு மற்றும் புதுபித்தல் செய்வதற்கான சிறப்பு பதிவு முகாம் நடக்கிறது. அதன்படி, இன்று(20ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கெலமங்கலம் பொது நூலக வளாகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையின் கீழ் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 17 தொழிலாளர் நலவாரியங்கள் அமைத்து அதில் பல்வேறு அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து, அவர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

எனவே, நலவாரியங்களில் உறுப்பினர்களாக சேர விரும்புவோர், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு விண்ணப்பம், 2 புகைப்படம், அசல் குடும்ப அட்டை, அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்ற குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்கான படிவம் ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம்.  ஏற்கனவே தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் பதிவினை இம்முகாமில் கலந்துகொண்டு புதுப்பித்துகொள்ளலாம். அத்துடன் ஏற்கனவே பதிவுபெற்று ஆதார் எண் பதிவு எண்ணுடன் இணைக்காத தொழிலாளர்கள் தங்களது ஆதார் எண்ணை இம்முகாமில் அளித்து தங்களது பதிவு எண்ணுடன் சேர்த்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>