×

திருச்செங்கோடு அருகே கூடுதல் பஸ் வசதி கோரி திடீர் சாலை மறியல்

திருச்செங்கோடு, நவ.20: திருச்செங்கோடு அருகே கூடுதல் பஸ் வசதி கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் டவுன் பஸ்சை சிறைபிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு- குமாரபாளையம் சாலையில் உள்ளது சூரியம்பாளையம் மற்றும் சட்டயம்புதூர்.  இந்த வழியாக குமாரபாளையத்திற்கும், ஈரோட்டிற்கும் 3 அரசு டவுன் பஸ்களும், ஒரு தனியார் பஸ்சும் இயக்கப்பட்டு வந்தது. தனியார் பஸ் வழித்தடத்தை மாற்றிக்கொண்டதால் இந்த வழியாக வருவதில்லை. இந்த வழியாக சென்ற அரசு டவுன்பஸ் ஒன்று சில வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள இரண்டு பஸ்களில் ஒன்று  நாராயணபாளையம், ஆத்தூராம்பாளையம் வழியாக திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், போதிய போக்குவரத்து வசதியின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ- மாணவிகள் மற்றும் பல்வேறு அலுவல்களுக்காக வெளியிடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இலவச பஸ் பாஸ் வைத்திருந்தும் மாணவ -மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். எனவே, கூடுதல் போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க கோரி நேற்று காலை சட்டையம்புதூர் கோயில் அருகே பொதுமக்கள் திரண்டனர். பின்னர், சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். மேலும், அந்த வழியாக வந்த டவுன் பஸ்சை சிறைபிடித்தனர். அப்போது, அந்த வழியாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற ஏராளமான மாணவ- மாணவிகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதுகுறித்த தகவலின்பேரில், திருச்செங்கோடு புறநகர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடமும், மாணவ -மாணவிகளிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து கூடுதல் பஸ்கள் விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட பஸ்சை மீட்ட போலீசார், போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த சாலை மறியல் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : bus facility ,Tiruchengode ,
× RELATED லாரியில் கொண்டு வந்த ₹1.13 லட்சம் பறிமுதல்