×

அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இலக்காக வைத்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்

நாமக்கல், நவ.20: 10, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இலக்காக வைத்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டுமென பாராட்டு சான்றிதழ் வழங்கி கல்வி அதிகாரி அறிவுறுத்தினார். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இதையொட்டி, 10ம் வகுப்பு பாட ஆசிரியைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை பார்வதி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், ஆசிரியைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியதாவது: நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். சிறந்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் இங்கு பணியாற்றுகிறார்கள். அதனால் தான், கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த கல்வியாண்டிலும் அந்த சாதனை 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலும் சேர்த்து தொடர வேண்டும். அதை இலக்காக வைத்து இப்போதில் இருந்தே ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றவேண்டும். அதற்கேற்ப மாணவியர் அனைவரும் நல்லமுறையில் படிக்கவேண்டும். ஒரு மாணவனோ, மாணவியோ ஒரு தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியிருந்தால், அவர் தோல்வி அடைந்தவர் என நினைக்ககூடாது.

வெற்றி பெற, அந்த மாணவி முயற்சி செய்திருக்கிறாள் என்றே கருத வேண்டும். தொடர்ந்து அந்த மாணவிக்கு நல்ல முறையில் பாடம் கற்பிப்பதன் மூலம் எளிதாக வெற்றி பெற செய்துவிடமுடியும். பொதுத்தேர்வில் ஒரு மாணவர் தோல்வி அடைந்தால் அவரின் வாழ்க்கையே திசைமாறிவிடும். அந்த நிலை ஏற்பட ஆசிரியர்கள் காரணமாக இருக்ககூடாது. அதேபோல், ஆசிரியைகளை மதித்து மாணவிகள் நடந்து கொள்ளவேண்டும். கடினமான பாறையை இலகுவாக்க அடிக்கப்படும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் திறவுகோல் ஆகும். மெல்ல கற்கும் மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு அவர்கள் அனைவரையும் வெற்றிப்பாதைக்கு ஆசிரியர்கள் கொண்டு செல்லவேண்டும். இந்த பள்ளி மாணவியர் மாநில அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களை பாராட்டுகிறேன். இந்த சாதனை தேசிய அளவிலும் தொடரவேண்டும். வாரம் ஒரு முறை இந்த பள்ளிக்கு வந்து ஆய்வு செய்வேன். இவ்வாறு மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பேசினார்.விழாவில், உதவித் தலைமை ஆசிரியை அன்பழகி, பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags : Teachers ,government election ,
× RELATED மாணவர்களின் நம்பிக்கை ஆசிரியர்கள்!