சேலத்தில் விற்கப்பட்டதாக கூறப்பட்ட ஆண் குழந்தை விழுப்புரத்தில் மீட்பு

சேலம், நவ.20:  சேலம் அருகே ₹3 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக கூறப்படும் ஆண் குழந்தையை போலீசார் விழுப்புரத்தில் மீட்டனர். அந்த குழந்தையை இன்று(20ம் தேதி) பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே நைனாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மீனா. இவர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து, திருப்பூரில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் கம்பெனியில் இருவரும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் மீனாவுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, மீனாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கோவை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் சேலத்தில் உள்ள மீனாவின் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் மீனாவை சேலத்திற்கு அழைத்து வந்து, 3 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அப்போது மீனா பெற்றோரிடம் குழந்தை மற்றும் கணவர் பற்றி கேட்டார். அதற்கு மீனாவின் பெற்றோர் இருவரும் இறந்துவிட்டதாக கூறினர்.

 

இதில், சந்தேகமடைந்த மீனா திருப்பூருக்கு சென்று விசாரித்தபோது அங்கு ராஜா உயிரோடு இருப்பது தெரிய வந்தது. அவரிடம் குழந்தை குறித்து கேட்டபோது, தனக்கு ஒன்றும் தெரியாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மீனா தனது பெற்றோரை சந்தித்து கேட்டபோது, குழந்தையை ₹3 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மீனா தனது கணவன் ராஜாவுடன் நேற்று முன்தினம் சேலம் கலெக்டர் அலுவலக்திற்கு வந்து குழந்தையை மீட்டுத் தரக்கோரி மனு அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டார். இதன்பேரில், எஸ்.பி. தீபா கனிகர் உத்தரவின்பேரில், ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் மீனாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், குழந்தையை விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் விற்றதாக கூறினர். உடனே, அவர்கள் தெரிவித்த முகவரிக்கு சென்று இன்ஸ்பெக்டர் குலசேகரன் விசாரித்தார். அப்போது, விற்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையை போலீசார் மீட்டனர். பின்னர், சேலத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்ட குழந்தை நேற்றிரவு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அக்குழந்தை இன்று(20ம் தேதி) காலை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. திருநாவலூரில் வசித்து வரும் மீனாவின் உறவு பெண்ணிடம் குழந்தையை கொடுத்து வைத்திருந்ததாகவும், அவரிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>