×

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டம்

ஊட்டி, நவ. 20: ஊட்டியில் தலைக்குந்தா பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை, நடிகர் விவேக் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் முக்கோணம் பகுதியில் இருந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் (அங்கன்வாடி மையம்) ரூ.10 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இம்மைய திறப்பு விழா மற்றும் மரக்கன்று நடும் விழா ஆகியவை நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி., சசிமோகன், மகளிர் திட்ட இயக்குநர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து குழந்தைகள் வளர்ச்சி மையத்தை திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் நடிகர் விவேக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகள் வளர்ச்சி மைய வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தலைக்குந்தா பகுதியில் 14 ஆயிரம் மரக்கன்று நடவு செய்யும் திட்ட துவக்க விழா நடந்தது. இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட எஸ்.பி., சசிமோகன் மற்றும் நடிகர் விவேக் ஆகியோர் பங்கேற்று மரக்கன்று நடும் விழாவினை துவக்கி வைத்தனர். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இம்மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.  நடிகர் விவேக் கூறுகையில், ‘‘இன்று (நேற்று) என்னுடைய பிறந்தநாள். தற்செயலாக மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்ததது மகிழ்ச்சியாக உள்ளது. மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதுடன், வனவிலங்குகளும் பாதிப்படைகின்றன. மண்வளம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்திலேயே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்னை பிளாஸ்டிக் ஒழிப்பு விளம்பர தூதராக தமிழக அரசு நியமித்துள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பிளாஸ்டிக்கின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். கோத்தகிரியில் ஒரு பள்ளியில் மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேசினேன். தமிழகம் முழுவதும் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளேன். தற்போது தலைக்குந்தாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது,’’ என்றார். பின்னர் போக்குவரத்து காவல்துறை சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு, இருசக்கர வாகன பேரணி நடந்தது. நடிகர் விவேக், பேரணியை துவக்கி வைத்தார். மேலும் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ரோஜா மலர் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்