×

சர்க்கார் சாமக்குளம் ஏரி சீரமைக்கும் பணி துவங்கியது

கோவை, நவ. 20:   கோவை கோவில்பாளையம் அருகேயுள்ள சர்க்கார் சாமகுளம் ஏரியை சீரமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது. கோவில்பாளையம் அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்தது சர்க்கார் சாமகுளம். இது கொண்டயம்பாளையம் குளம், காளிங்கராயன் குளம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த குளத்திற்கு தன்னாசி ஓடை, கீரணத்தம் கரட்டுமேடு ஓடை, கொண்டயம்பாளையம் ஓடைகளில் இருந்து வரும் நீர் வரத்து உள்ளது. ஓடைகள் முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் குளத்திற்கு நீர் வருவதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த குளத்தை கோவில்பாளையம் பேரூராட்சி, கொண்டயம்பாளையம் ஊராட்சி பகுதி சார்ந்த இளைஞர்கள் பொதுமக்கள், அரசியல் அமைப்புகள் இணைந்து சீரமைக்கும் பணிகளில் ஈடுபட முடிவு செய்தனர்.மேலும், கவுசிகா நதியின் ஏழு தடுப்பணைகளை புனரமைக்கவும், களப்பணிகளில் ஈடுபடவும் கோவில்பாளையம் நீர் நிலை பாதுகாப்பு அமைப்பு முடிவெடுத்தனர். இதில், முதல் கட்டமாக சர்க்கார் சாமக்குளம் ஏரியின் கரைகளை பலப்படுத்தவும், நீர்வழி பாதைகளை சீரமைக்கவும் முடிவு செய்துள்ளனர்.  கோவில்பாளையம் நீர்நிலை பாதுகாப்பு குழுவுக்கான ஆலோசனைகள் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், நேற்று சர்க்கார் சாமகுளம் ஏரி சீரமைக்கும் பணி துவங்கியது. இதனை ஏம்.எல்.ஏ ஆறுகுட்டி துவக்கிவைத்தார். இந்த களப்பணியில் கோவில்பாளையம் நீர் நிலை பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து பல்வேறு பகுதி இளைஞர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசியல் அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர். மேலும், தொடர்ந்து வரும் வாரங்களில் களப்பணிகள் ஞாயிறு காலை 7 மணி முதல் 9 மணி வரை சர்க்கார் சாமகுளம் ஏரி பகுதிகளில் நடக்கிறது. கோவில்பாளையம் மற்றும் கொண்டயம்பாளையம் நீர்நிலைகளை புனரமைப்பதன் மூலம் அப்பகுதி சார்ந்த சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய விளை நிலங்கள் பலனடையும், விவசாயம் சார்ந்த கால்நடை மேய்ப்பு தொழிலிலும் அதிகரிக்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என கோவில்பாளையம் நீர் நிலை பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.



Tags : Sarkar Chamakulam Lake ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்