×

ஈரோடு ஜவுளி சந்தையில் ஐயப்ப பக்தர்கள் ஆடை விற்பனை விறுவிறுப்பு

ஈரோடு, நவ.20: ஈரோடு ஜவுளி சந்தையில் ஐயப்ப பக்தர்கள் அணியும் ஆடைகளின் விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு ஜவுளிசந்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை சீசன் விற்பனை முடிவடைந்த நிலையில் கடந்த இரு வாரமாக வியாபாரம் மந்தநிலையில் காணப்பட்டது. தற்போது கார்த்திகை மாதம் துவங்கி உள்ளதையடுத்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அணியும் ஆடைகளின் விற்பனை களைகட்ட துவங்கி உள்ளது. இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறுகையில்,`தீபாவளிக்கு பிறகு ஜவுளி சந்தையில் இந்த வாரம் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

குறிப்பாக, மொத்த வியாபாரம் கைகொடுத்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வந்து ஐயப்ப பக்தர்கள் அணியும் கருப்பு, காவி, நீலம் வேட்டி, துண்டு, சட்டை மற்றும் இருமுடிகட்டும் பைகளை அதிகளவில் கொள்முதல் செய்துள்ளனர். இதுதவிர, குளிர்கால விற்பனையாக பெட்ஷீட், கம்பளி ஆகியவற்றின் விற்பனையும் அதிகளவில் நடந்தது. சில்லரை விற்பனை குறைவாக இருந்த போதிலும், மொத்த வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடந்தது’ என்றனர்.


Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை