×

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள பரணி தீபம், மகாதீப விழா அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பு 14 இடங்களில் சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலை, நவ.20: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீப நிகழ்வுகளை அகன்ற திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக, 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும்.மகா தீப தரிசனத்துக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விரிவான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது, அண்ணாமலையார் கோயிலுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.எனவே, கோயிலுக்குள் செல்ல முடியாத பக்தர்கள் மற்றும் விழா நடைபெறும் கோயில் பிரகாரத்துக்குள் செல்ல முடியாத பக்தர்கள் விழாவை தரிசிக்க வசதியாக, நேரடி ஒளிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகாலை நடைபெறும் பரணி தீப விழாவை, அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தின் அருகிலும், வடக்கு கட்டை கோபுரம் அருகில் உள்ள கலையரங்கத்திலும் எல்இடி வசதியுள்ள அகன்ற திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல், மாலையில் நடைபெறும் மகாதீப விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய, ராஜகோபுரத்தின் வலதுபுறம் மற்றும் இடதுபுறம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம், திருமஞ்சன கோபுரம் கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்தி, கலையரங்கம், மகிழ மரம், உள்துறை அலுவலகம், பெரிய தேர் நிலை நிறுத்துமிடம், முனீஸ்வரன் கோயில் அருகில் மற்றும் மாட வீதியில் காந்திசிலை அருகில் என மொத்தம் 14 இடங்களில் அகன்ற திரைகள் அமைக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : locations ,Mahadeepa Festival ,Thiruvannamalai ,Paranee Deepam ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு