வேலூர் மாவட்டத்தில் இருப்பில் குளறுபடி ஐந்து உரக்கடைகளுக்கு உரிமம் ரத்து அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர், நவ.20:வேலூர் மாவட்டத்தில் உரம் இருப்பில் குளறுபடி காணப்பட்டதால் 5 உரக்கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர் மாவட்டத்தில் 250 சில்லரை விற்பனை கடைகள், 61 மொத்த விற்பனை கடைகள், 181 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்வதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் உரம் விற்பனை களைகட்டியுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி வேலூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் மூட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் விரிவாக செய்தி வெளியானது.

இதையடுத்து, வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) தீட்சித் உத்தரவின்பேரில் 20 ஒன்றியங்களில் மொத்தம் மற்றும் சில்லரை தனியார் உரக்கடைகளில் வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுஜாதா மற்றும் வேளாண் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். அதில் வேலூர் மாவட்டத்தில் 1986.948 மெட்ரிக் டன் யூரியா உரம் இருப்பு உள்ளது தெரியவந்தது.காவேரிப்பாக்கம், ஜோலார்பேட்டை, புதுப்பேட்டை பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் உர இருப்பு பதிவேடு பராமரிக்காதது, உர இருப்பில் வித்தியாசம் போன்ற காரணங்களால் 5 உரக்கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என்று இணை இயக்குனர் தீட்சித் தெரிவித்தார்.

Related Stories:

>