×

ஆன்லைன் பர்மிட்டுடன் மணல் அள்ளும் லாரிகள் முறைகேடாக விற்பனை செய்யும் அவலம்

அறந்தாங்கி, நவ.19: அறந்தாங்கி பகுதியில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஆன்லைனில் பதிவு செய்து மணல் ஏற்றும் லாரிகளும் முறைகேடாக மணலை விற்பனை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் நடைபெற்ற மணல் குவாரிகள் கோர்ட் உத்தரவின்படி மூடப்பட்டன. தொடர்ந்து ஏற்பட்ட மணல் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து அள்ளப்படும் மணல், மணல் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாரத்தில் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மணலுக்காக ஆன்லைனில் பதிவு செய்ய முடியும் என்பதால், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர்களால் தொழில்நுட்ப ரீதியாக அதிக அளவில் லாரிகள் வைத்துள்ள வெளியூர் நபர்களுக்கு ஈடு கொடுக்க முடியாததால், 90 சதவீத வெளியூர் லாரிகள் ஆன்லைன் மூலம் மணலுக்கு பதிவு செய்யபடுகிறது.

இவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட வெளியூர் லாரிகளுக்கு, ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு அறந்தாங்கியை அடுத்த கோவில்வயல் மணல் சேமிப்பு கிடங்கில் 3 யூனிட் மணல் ஏற்றிவிடப்படுகிறது. அவ்வாறு மணல் சேமிப்பு கிடங்கில் முறைப்படி பர்மிட் பெற்று மணல் ஏற்றிச் செல்லும் வெளியூர் லாரிகளை சிலர் மடக்கி, இங்கிருந்து நீங்கள் பர்மிட் வாங்கியுள்ள ஊருக்கு மணலை கொண்டு சென்றால் அதிக செலவாகும். ஆனால் போதுமான விலை கிடைக்காது. அதனால் ஆன்லைன் பர்மிட்டில் வாங்கிய மணலை அறந்தாங்கி பகுதியில் அதிக விலைக்கு விற்றுவிடலாம். ஆன்லைன் பர்மிட் இருப்பதால் காவல்துறையோ, வருவாய்த்துறையோ ஒன்றும் செய்யாது என ஆசை வார்த்தை கூறி, வெளியூர் லாரியில் ஏற்றியுள்ள மணலை அறந்தாங்கி, நாகுடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். பின்னர் அந்த லாரிகளில் வாய்ப்பு இருந்தால் அறந்தாங்கி பகுதியில் திருட்டு மணலை ஏற்றி அனுப்புகின்றனர். இவ்வாறு ஆன்லைன் பர்மிட்டில் கோவைக்கு ஏற்றிச் செல்வதாக பதிவு செய்த லாரி, கோவில்வயல் மணல் சேமிப்பு கிடங்கில் மணலை ஏற்றிக் கொண்டு, நாகுடியில் சட்டவிரோதமாக மணலை இறக்கியபோது, காவல்துறையினரால் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகுடியில் ஆன்லைனின் பதிவு செய்யப்பட்டு மணல் ஏற்றிச் சென்ற ஒரு லாரி பிடிப்பட்ட நிலையில், மேலும் பல லாரிகளும் இது போன்ற சட்டவிரோதமாக அறந்தாங்கி பகுதியிலேயே மணலை இறக்கிவிடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது:அறந்தாங்கி பகுதியில் கட்டுமானத்திற்கு மணல் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ள குவாரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போதும், பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் ஆன்லைன் பர்மிட் மூலம் மணல் ஏற்ற வரும் பல லாரிகள் பர்மிட் பெற்று மணலை ஏற்றிய பின்பு அறந்தாங்கி பகுதியிலேயே சில முகவர்கள் அதிக விலைக்கு விற்கின்றனர். பின்னர் அந்த லாரிகளில் முடிந்தால் திருட்டு மணலை ஏற்றி அனுப்புகின்றனர் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், லாரியை நிறுத்தி வைத்து, நேரம் கிடைக்கும் போது, வேறு லோடுடன் அனுப்பி வைக்கின்றனர். சட்டவிரோதமாக மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள சிலரோடு வெளியூர் லாரி உரிமையாளர்கள் ஒருசிலர் தொடர்பு வைத்துக் கொண்டு, சட்டவிரோதமாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய மணலை அறந்தாங்கி பகுதியிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர் இவ்வாறு அவர்கள் கூறினர். எனவே காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் ஆன்லைன் பர்மிட் மூலம் வெளியூர்களுக்கு மணல் ஏற்றிச் செல்வதாக கூறி, அறந்தாங்கி பகுதியில் மணல் இறக்கும் லாரிகள், லாரி உரிமையாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags : Sandy ,
× RELATED உம்மன் சாண்டிக்கு எதிரான சரிதா...