×

பட்டுக்கோட்டை ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும்

பட்டுக்கோட்டை, நவ. 19: பட்டுக்கோட்டை எல்சி 94 ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார். பட்டுக்கோட்டையில் 80 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கே.ஓ.என். பாளையத்திற்கும்- அண்ணாநகருக்கும் இடைபட்ட பாதையில் இருந்த எல்சி 94 (லெவல் கிராஸ்) ரயில்வே கேட்டை காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதை பணிகளுக்காக 2012ம் ஆண்டு முதல் தமிழக அரசு பரிந்துரையின்பேரில் ரயில்வே நிர்வாகம் எடுத்து விட்டது. இதனால் மேற்படி ரயில்வே கேட்டுக்கு தென்புறம் உள்ள அண்ணாநகர், ஓடக்கரை, லெட்சுமி நகர், பாரதி நகர், பூமல்லியார்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் வசிக்கும் மக்கள் அனைவருமே போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள் நலன் கருதி பட்டுக்கோட்டையில் உள்ள எல்சி 94 ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வலியுறுத்தி எல்சி 94 பயனீட்டாளர் நல அமைப்பினர் உள்பட அப்பகுதி பொதுமக்கள் 1,000க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கடந்தாண்டு மார்ச் 1ம் தேதி கருப்புக்கொடி ஏந்தி காத்திருப்பு போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். அந்த போராட்டத்தின்போது இதற்கு மாற்றாக இந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து பட்டுக்கோட்டை எம்எல்ஏ சேகர், சுரங்கப்பாதை அமைப்பதற்காக ரயில்வேதுறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி முயற்சி எடுத்தார். அந்த முயற்சியை தொடர்ந்து ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமென தெற்கு ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பின் ரயில்வே பொதுப்பணித்துறை கூடுதல் இன்ஜினியர் பிரபாகரன், பட்டுக்கோட்டையில் எல்சி 94 ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விரைவில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தெற்கு ரயில்வே மேலாளருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். பட்டுக்கோட்டை எம்எல்ஏ சேகர், நகராட்சி ஆணையர் (பொ) பாஸ்கர் உடனிருந்தனர்.

Tags : tunnel ,Pattukottai Railway Gate ,
× RELATED சுரங்கப்பாதை கட்டுமான பணியில்...