×

தாயில்பட்டி பகுதியில் போதிய பஸ் வசதியின்றி பொதுமக்கள் அவதி கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

சிவகாசி, நவ. 19: வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள தாயில்பட்டி பகுதியில் போதிய பஸ் வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தாயில்பட்டி வழியாக கூடுதல் அரசு பஸ் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள தாயில்பட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த ஊரைச் சுற்றிலும் கலைஞர் காலனி, மேலக்கோதைநாச்சியார்புரம், துரைச்சாமிபுரம், கீழதாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், எரவார்பட்டி, சேதுராமலிங்கபுரம், மீனாட்சிபுரம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு தாயில்பட்டி முக்கிய சந்திப்பாக விளங்குகிறது. கிராம மக்கள் பலசரக்கு, காய்கறி வாங்க தாயில்பட்டி வந்து செல்கின்றனர். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்நிலையில், தாயில்பட்டிக்கு சிவகாசி, சாத்தூர், ஆலங்குளம் பகுதியில் இருந்து போதிய அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பஸ்கள் நின்று செல்ல ஊரின் மையப்பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பஸ்நிலையம் கட்டப்பட்டது. இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட பஸ்களை நிறுத்த முடியவில்லை. இதனால், சாலையிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. காலை, மாலை நேரங்களில் போதிய பஸ் வசதியில்லாமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து கடைகள், வீடுகளை கட்டியுள்ளனர். பள்ளி அருகே வேன்கள், வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகறிது.

மேலும், தாயில்பட்டியைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் தொழிலாளர்களால் பஸ்சில் கூட்டம் அதிகமாகிறது. இதனால், படியில் தொங்கிச் செல்கின்றனர். சில சமயங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தாயில்பட்டி வழியாக காலை, மாலை நேரங்களில் சாத்தூர், சிவகாசி, ஆலங்குளம் ஆகிய ஊர்களுக்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,bus facilities ,Thailipatti ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...