×

அதிகாரிகள் அலைக்கழிப்பால் வரத்துக் கால்வாயை தூர்வாரிய கிராம மக்கள்

காரியாபட்டி, நவ. 19: காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு பெரியகுளம் கண்மாய் தங்களது பராமரிப்பில் இல்லை என யூனியன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைவிரித்தால், வரத்துக் கால்வாயை கிராமத்து இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் தூர்வாரினர்.
காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பெரியகண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு மழை காலங்களில், சென்னம்பட்டி வலப்புற கால்வாய் மூலம் நீர்வரத்து ஏற்படும். இந்த கண்மாய் யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக மல்லாங்கிணறு பகுதியில் மழை பெய்ததால், சென்னம்பட்டி கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது. இந்நிலையில், கால்வாயிலிருந்து பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வரத்துக் கால்வாய் தூர்ந்ததால், மழைநீர் செல்வதில்லை. வரத்துக் கால்வாயை தூர்வாரக்கோரி மல்லாங்கிணறு பகுதி இளைஞர்கள், காரியாபட்டி பிடிஓ மாரியம்மாளிடம் கேட்டபோது, அவர், ‘பெரிய கண்மாய் யூனியன் கட்டுப்பாட்டில் இல்லை. பொதுப்பணித்துறையை அணுகுமாறு தெரிவித்துள்ளார். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ‘கண்மாய் யூனியன் வசம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதையடுத்து மல்லாங்கிணர் பகுதி இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு ஜேசிபி மூலம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாயை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.

இது குறித்து ரமேஷ்பாபு என்பவர் கூறுகையில், ‘மல்லாங்கிணறு பெரிய கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. நீர்வரத்து கால்வாய்களும் தூர்ந்து கிடக்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பெரிய கண்மாய் மற்றும் சென்னம்பட்டி கால்வாயை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கக்கோரி அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்க இளைஞர்கள் சில மாதங்களுக்கு முன் கலெக்டரிடம் மனு அளித்தோம். ஆனால், யூனியன் கட்டுப்பாட்டில் இருந்து கண்மாயை மாற்ற முடியாது என கூறிவிட்டனர். ஆனால், தற்போது காரியாபட்டி பிடிஓ கண்மாய் யூனியன் கட்டுப்பாட்டில் இல்லை என கூறுகிறார். இதனால், கிராம மக்களும், இளைஞர்கள் கண்மாய் நீர்வரத்து கால்வாயை தூர்வாரினோம்.
ராஜா என்பவர் கூறுகையில், ‘பெரியகண்மாயை பொதுப்பணித்துறை பராமரிக்க தயாராக இருந்தனர். ஆனால், யூனியனில் இருந்து கண்மாயை தரவில்லை. ஆனால், இப்போது கண்மாய் எங்கள் வசம் இல்லை என பிடிஓ கூறுகிறார். அதிகாரிகளை நம்பினால் மழைநீர் வீணாகி விடும் என இளைஞர்களும், கிராம மக்களும் சேர்ந்து சென்னம்பட்டி கால்வாயிலிருந்து பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் நீர்வரத்து கால்வாயை ஜேசிபி மூலம் தூர்வாரினோம்’ என்றார்.

Tags :
× RELATED களக்காடு அருகே கால்வாய்க்குள் இறங்கி...