×

சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்ய நவ.30ம் தேதி கடைசி நாள்

சிவகங்கை, நவ.19: நடப்பு சம்பா பருவத்திற்கு விரைந்து பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் அரசு பொது சேவை மையங்கள் மூலமாக பயிர்க் காப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் இயல்பான அளவை விட கூடுதலான அளவு மழை பெய்துள்ளதால் நேரடி நெல் விதைப்பு நடைபெறும் பகுதிகள் அனைத்தும் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாற்றங்கால் அமைத்து நெல் நடவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 55 ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 5 ஆயிரத்து 989 ஏக்கர் நெல் பயிர் மட்டுமே விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு காப்பீட்டு பிரிமியத் தொகை ரூ.390 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும், பயிர் காப்பீடு செய்வதை சாகுபடி செலவினங்களில் ஒன்றாக கருதி, தாமதமின்றி காப்பீடு செய்ய வேண்டும். நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30ம் தேதி கடைசி நாள். காப்பீடு செய்ய இன்னும் 15 நாட்களே உள்ளன. விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் பயிருக்கான அடங்கல் அறிக்கைகள் வழங்க தேவையான மூவிதழ் அடங்கல் புத்தகங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே கடைசி நேரம் வரை காத்திருக்காமல் நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். இறுதிக் கட்ட கூட்ட நெரிசலை தவிர்ப்பதன் மூலம் பயிர் காப்பீடு கட்டணம் வசூலிப்பவர்கள் தவறுகளோ குறைபாடுகளோ இன்றி பயிர்க் காப்பீடு பதிவுப் பணியை முழுமையாக மேற்கொள்ள அனைத்து விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : samba season ,
× RELATED சம்பா பருவ வரத்து விவசாயிகள், வியாபாரிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம்