×

பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம் சமுதாய கூடத்தில் இயங்கும் அரசுப்பள்ளி இளையான்குடி அருகே கொடுமை

இளையான்குடி, நவ.19:  இளையபன்குடி அருகே இடியும் நிலையில் உள்ளதால் அரசுப் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. சமுதாயக்கூடத்தில் பள்ளி இயங்குகிறது. இளையான்குடி அருகே கொ.இடையவலசை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகரில், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் இந்திராநகர் மற்றும் காந்திசாலை பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 மாணவ, மாணவிகள் தொடக்க கல்வியை படித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. நான்கு பக்க சுவர்களும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலே உள்ள கான்கிரீட் கூரை பெயர்ந்து, மழை நீர் கட்டிடத்தின் உள்ளே விழுகிறது. கட்டிடத்தின் தரைதளம் பிதுங்கி, வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்  பக்க சுவர்களில் உள்ள  பில்லர்கள் மற்றும் மேலே உள்ள கான்கிரீட் பெல்ட்கள் வெடிப்பு ஏற்பட்டு, அவ்வப்போது இடிந்து விழுகிறது. அதனால் எந்த நேரத்தில் எப்போது இடியுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆபத்தான அரசுப் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது. அருகில் உள்ள சமுதாயகூடத்தில் தற்போது பள்ளி செயல்பட்டு வருகிறது.

தற்காலிகமாக கடந்த ஒரு மாதகாலமாக சமுதாய கூடத்தில்தான் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பாடம் நடத்துவதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே ஆபத்தான, இடியும் நிலையில் உள்ள அரசுப் பள்ளியை அகற்றி விட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பெரியசாமி கூறுகையில், கடந்த நில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. தரமில்லாததால் தற்போது இடியும் நிலையில் உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்போது சமுதாயகூடத்தில் தற்காலிகமாக வகுப்பறைகள் செயல்படுகிறது. எனவே ஆபத்தான கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட அமைச்சர், எம்எல்ஏ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : school building ,
× RELATED கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் குழந்தை நேய பள்ளி கட்டிடம் திறப்பு