×

பராமரிப்பு எப்போதும் இல்லை மழைக்கு ஒழுகும் டவுன் பஸ்கள் பயணிகள் கடும் அவதி

திருவாடானை, நவ.19:  திருவாடானை பகுதியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் மழைக்கு ஒழுகுகின்றன. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவாடானையில் இருந்து கிராம பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக ஆனந்தூர், திருவெற்றியூர், கள்ளிக்குடி, சோழந்தூர், ஆர்.எஸ்.மங்கலம், காரங்காடு, கொக்கூரணி ஓரியூர், தேவகோட்டை, நெய்வயல், செவ்வாய்பேட்டை, தளிர் மருங்கூர்,ஆயிர வேலி ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் உள்ள இருக்கை ,ஜன்னல் மற்றும் மேற்கூரை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் மழை நேரங்களில் இந்த பஸ்களில் மழை நீர் ஒழுகி பயணிகளை சிரமத்திற்கு ஆளாக்குகின்றன. அதிகாரிகள் இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

அரசு பஸ் டிரைவர்கள் சிலர் கூறுகையில், இப்பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மழைக்கு ஒழுக்குகின்றன. இதனால் தினமும் பயணிகளுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது. மேற்கூரையை தார்பாய் கொண்டு ஒட்ட வேண்டும். ஆனால் நிர்வாகம் பஸ்களை சரியாக பராமரிப்பதில்லை என்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், திருவாடானையில் இருந்து செல்லும் அரசு டவுன் பஸ்களின் இருக்கைகள் முறையாக இல்லை. டயர்களும் மிக மோசமாக உள்ளன. இதனால் அடிக்கடி பஞ்சர் ஏற்பட்டு பயணிகளை பாதிவழியில் இறக்கி விடுவது வாடிக்கை ஆகிவிட்டது. மேலும் கிராமப்புறங்களை பொறுத்தமட்டில் இந்த டவுன் பஸ்களை நம்பியே பயணிகள் உள்ளனர். மழை காலங்களில் பள்ளி மாணவர்கள் சீருடைகள் நனைந்து அவதிப்படுகின்றனர். எனவே ஓட்டை, உடைசல் ஆக இயக்கப்படும் டவுன் பஸ்களை மாற்றி வேறு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை