×

விலையில்லா மாடு வழங்கியதில் முறைகேடு கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

சாயல்குடி, நவ. 19:  மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பிரப்பன்வலசை ஊராட்சியில் இலவச மாடு வழங்கியதில் முறைகேடு நடந்தாக கூறி கிராம பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பிரப்பன்வலசை ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா கறவை மாடு வழங்கும் திட்டத்தின் கீழ் 49 பேருக்கு வழங்க பயனாளிகள் தேர்வு நடந்தது. இதற்காக வட்டார கால்நடை மருத்துவர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மனுக்களை பெற்றனர். இதில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள், ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், தாழ்த்தப்பட்ட மக்கள் என முன்னுரிமை உள்ள மக்களை தேர்வு செய்ய வில்லை என்று புகார் எழுந்தது. இதனால் நேற்று விவசாய நிலங்கள் அதிகம் உள்ள மக்கள், கடந்த கால உள்ளாட்சி பிரதிநிதிகளின் உறவினர்கள், ஊராட்சி செயலர்களின் உறவினர்கள், வசதிபடைத்தவர்கள், கறவை மாடுகள் வைத்திருப்போர் என  முன்னுரிமையற்றவர்களை தேர்வு செய்து, முறைகேடாக  கறவை மாடுகளை வழங்கியதாக கூறி நேற்று கிராமமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

 இதுகுறித்து பிரப்பன்வலசை விநாயக பாலமுருகன் கூறும்போது, பிரப்பன்வலசை ஊராட்சியில் சுமார் 1800 பேர் வசிக்கிறோம். இதில் தமிழக அரசின் கறவை மாடுகள் வழங்கப்பட பயனாளிகள் தேர்வு நடைப்பெற்றது. 49 பேருக்கு வழங்க அரசு அனுமதி அளித்தது. வெளிப்படையாக சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தி, தகுதியான பயனாளிகளிடமிருந்து மனுக்களை பெறாமல், மறைமுகமாக முறைகேடாக, முன்னுரிமையற்றவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வழங்கியுள்ளனர். ஆனால் ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என தகுதியானவர்களின் மனுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்து  மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக கறவை மாடு வழங்க புதிய குழுவை கலெக்டர் அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : Public ,Collector ,
× RELATED அதிகரித்து வரும் வெயில்...