×

பயிர்காப்பீடு வழங்கா விட்டால் போராட்டம் முதுகுளத்தூர் பகுதி விவசாயிகள் அறிவிப்பு

சாயல்குடி, நவ. 19:  பயிர்காப்பீடு தொகையை முழுமையாக வழங்க கோரி முதுகுளத்தூர் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் வருவாய்துறை, காவல்துறையினர் சமாதான கூட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2018-19ம் ஆண்டிற்கான வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, தேசிய பயிர்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பிரிமீயம் செலுத்தியிருந்தனர். அதன்படி மாவட்டத்தின் சில பகுதியினருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு விட்டது. அதன்படி 2018-19ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு இழப்பீடு தொகையும் விவசாயிகளின் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் முதுகுளத்தூர் தாலுகாவில் சில பகுதிக்கும் மட்டும் வழங்கப்பட்டு விட்டது. பெரும் பகுதியான காக்கூர், பெரியகையகம், அனிஉருந்தல், கோடையரேந்தல், பொக்கனரேந்தல், பொன்னக்னேரி, கீழத்தூவல், உடைகுளம், சாம்பக்குளம், கீழகன்னிச்சேரி, விளங்குளத்தூர், வெண்ணீர்வாய்க்கால், பொசுக்குடி, பொசுக்குடிபட்டி, புளியங்குடி, தஞ்சாக்கூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளுக்கு வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்தாண்டு விவசாயம் செய்ய வாங்கிய கடனை கட்ட முடியாமலும், தற்போது நல்ல மழை பெய்தும் விவசாய பணிகளை செய்ய போதிய பணம் இன்றி கஷ்டப்படுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

பயிர்காப்பீடு தொகை கேட்டு பலமுறை கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இழப்பீடு தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று முதுகுளத்தூர் பகுதியிலுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், விவசாயி சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் போராட்டம் நடத்த போவதாக கூறி நேற்று முன்தினம் முதுகுளத்தூர் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினர். இதனை போலீசார், வருவாய் துறையினர் கிழித்தனர். இந்நிலையில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து சமாதான கூட்டம் நேற்று முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பரமக்குடி கோட்டாட்சியர்(பொ) ரவிசந்திரன் தலைமை வகித்தார். டிஎஸ்பி ராஜேஸ் முன்னிலை வகித்தார். இதில்  பயிர்காப்பீடு தொகை முழுமையாக விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. பயிர்காப்பீடு தொகை வழங்குவதில் காலம் தாமதம் ஏற்பட்டால் கிராமங்களில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் கூறினர்.

Tags : area ,Mudukulathur ,
× RELATED வாட்டி வதைக்கும்...