பஸ் ஸ்டாண்டில் பயமுறுத்தும் விளம்பர பிளக்ஸ் போர்டுகள்

காளையார்கோவில், நவ.19: காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள நிழற்கூடத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள் பயணிகள் மீது விழும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் மதுரை, தொண்டி, காரைக்குடி, பரமக்குடி பேருந்துகள் நிற்கும் இடத்தில் உள்ள நிழற்கூடத்தின் மேல் பகுதியில் பல்வேறு வர்த்தகர்கள் விளம்பர போர்டுகள் வைப்பதற்கு இரும்பு ஆங்கில் அமைத்து அவற்றில் விளம்பரப் பலகைகளை கட்டிவைத்துள்ளார்கள். சில வருடங்களுக்கு முன் வைக்கப்பட்ட விளம்பரப் போர்டுகள் கிழிந்து தொங்கிக் கெண்டு உள்ளது. மேலும் இரும்பு கம்பிகளும் துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளது. தற்போது பேனர்களால் ஏற்படும் விபத்தில் உயிர்சேதம் நடந்து வரும் நிலையில் காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் இதுபோன்ற பேனர்கள் இருப்பது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காளையார்கோவில் பேருந்துநிலையம் இடநெருக்கடியில் உள்ளதாலும் தற்போது கிராமப்புறங்களில் திருவிழா மற்றும் திருமண விஷேசகாலங்கள் நடைபெறும் காலம் என்பதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. பயணிகள் நிற்பதற்கு ஒரே ஒரு சிறிய கட்டிடம் தான் உள்ளது. காளையார்கோவில் மக்கள் தொகை ஏற்றவாறு பஸ்நிலையம் இல்லாததால் எப்பொழுதும் கூட்டமாக காணப்படும். தற்போது சில நேரங்களில் காற்று பலமாக அடிப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் விளம்பர போர்டு மற்றும் இரும்பு கம்பிகள் பயணிகள் மீது விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட விளம்பரதாரர்கள் புதுப்பிக்க வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும். அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றார்கள்.

Related Stories:

>