×

மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நெற்பயிர்களை தாக்கும் செவட்டை நோய் விவசாயிகள் கவலை

வாடிப்பட்டி, நவ. 19: வாடிப்பட்டி பகுதியில் நெற்பயிர்களை வேகமாக தாக்கி வரும் செவட்டை நோயினை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாடிப்பட்டி பகுதியில் பேரனை முதல் கள்ளந்திரி வரை சுமார் 45ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முல்லை பெரியாறு பாசன கால்வாய் தண்ணீர் மூலம் இருபோக நெல்சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் இப்பகுதி விவசாயிகள் முதல்போக நெல் சாகுபடி பணிகளை முழுவீச்சில் துவங்கினர். இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் ஏ.டி.டி.37, ஐ.ஆர்.16, உமா, ஜோதி ஆகிய விதை நெற்கள் மூலம் தயாரான நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். இவை 100 நாட்களிலிருந்து 120 நாட்களில் விளையும் தன்மை உடையது. தற்போது நெற் பயிர்கள் பால்பிடிக்கும் பருவத்திற்கு வர வங்கியுள்ளன.

இந்நிலையில் இப்பகுதி நெற்பயிர்களில் செவட்டைநோய் தாக்குதல் அதிகளவில் பரவி வருகிறது. இம்மாதிரியான நோய் தாக்குதலுக்குள்ளாகும் நெற்பயிர்கள் சரியாக பால் பிடிக்காமல் கதிர் சிகப்பு நிறத்தில் மாறி பின்னர் காய்ந்து விளைச்சலில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என இப்பகுதி விவசாயிகள் புலம்பி வருகின்றனர். எனவே வாடிப்பட்டி வேளாண்மை துறை அதிகாரிகள் விளைநிலங்களை நேரில் பார்வையிட்டு உரிய ஆலோசனைகளை வழங்கி நெற்பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : district ,Vadipatti ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...