×

மேயர் வேட்பாளர் சீட் கேட்டு திமுக, அதிமுக, பாஜ பெண்கள் மனு

மதுரை, நவ. 19:  மதுரை மேயர் பதவி வேட்பாளர் சீட் கேட்டு திமுக, அதிமுக, பாஜ பெண்கள் கட்சியில் மனு அளித்துள்ளனர். ஒதுக்கீட்டு முறை என்ன? என்று அரசின் முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு அட்டவணையை டிசம்பர் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்அடிப்படையில் தேர்தல் முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அடிப்படையில் தேர்தல் நடக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராாட்சிகளில் வார்டுகள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடுகளை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 50 வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேயர் பதவி ஒதுக்கீடு குறித்து இன்னும் அரசு முடிவு எடுத்து விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் 1978ல் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பதவி காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. அதில் 2 ஆண்டுக்கு ஒரு மேயர் என 3 பேர் இருந்தனர். அதன்பிறகு 1996ல் தான் மாநகராட்சி தேர்தல் நடந்தது.

இதன் பதவி காலம் 5 ஆண்டுகளாக்கப்பட்டு, இடஒதுக்கீடுகளும் அமல் செய்யப்பட்டன. மேயர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 2001ல் மேயர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் கவுன்சிலர் மூலம் மேயர் தேர்வு நடந்தது. கடைசியாக 2011 தேர்தலில் மீண்டும் மேயர் மக்களால் தேர்ந்ெதடுக்கப்பட்டார். ஒதுக்கீட்டு முறை அமலான பிறகு இருந்த 4 மேயர்களில் 2006-11ம் ஆண்டு வரை மட்டும் பெண் மேயர் இருந்துள்ளார். தற்போது பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு அமலாகி இருப்பதால், மதுரை மேயர் பெண்ணாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இங்குள்ள 12 லட்சத்து 87 ஆயிரத்து 508 வாக்காளர்களில் பெண்கள் 6 லட்சத்து 51 ஆயிரத்து 879 பேரும், ஆண்கள் 6 லட்சத்து 35 ஆயிரத்து 548 பேரும், திருநங்கைகள் 81 பேரும் இடம் பெற்றுள்ளனர். 16 ஆயிரத்து 331 பெண்கள் வாக்கு அதிகமுள்ளது. எனவே மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடாக அதிக வாய்ப்புள்ளது. அதிகாரிகளும் இந்த கணக்கீட்டின் அடிப்படையில் பரிந்துரை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

பெண் ஒதுக்கீடு இல்லாவிட்டாலும் பொது பட்டியலில் பெண்களும் போட்டியிட முடியும். இந்த சூழலில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திமுக சார்பில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி மகள் மேகலா, முன்னாள் கவுன்சிலர் சின்னம்மாள், காந்திமதி, முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் மனைவி ராணி, முன்னாள் கவுன்சிலர் சசிகுமார் மனைவி வாசுகி ஆகியோரும் மனு அளித்துள்ளனர். திமுக சார்பில் நவம்பர் 20ம் தேதி (நாளை) வரை மனுக்கள் அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் முன்னாள் மண்டல தலைவர் சண்முகவள்ளி, முன்னாள் கவுன்சிலர் கண்ணகி உள்ளிட்ட பலரும் மனு அளித்துள்ளனர். அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா குடும்பத்தை சார்ந்த பெண்கள் பெயரிலும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் விவரம் வெளியிடப்படவில்லை. பா.ஜ. சார்பில் மகாலட்சுமி மனு அளித்துள்ளார். கவுன்சிலர் வார்டு 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அதில் முன்னாள் கவுன்சிலர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் மனைவி குடும்பத்தை சார்ந்த பெண்கள் விரும்ப மனு அளித்துள்ளனர். இந்நிலையில், மாநகராட்சி தேர்தல் அதிகாரியாக ஆணையாளர் விசாகன் நியமிக்கப்படுகிறார். மேயர் தேர்தலும், 100 வார்டு கவுன்சிலர் தேர்தலும் இவரது பொறுப்பிலேயே நடக்க இருக்கிறது. மேயர் பதவிக்கு ஆணையாளரிடமும், கவுன்சிலர் பதவிக்கு அந்தந்த மண்டல உதவி ஆணையாளரிடமும் வேட்பு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,AIADMK ,candidate ,BJP ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...