×

நியூசிலாந்தில் இறந்த மகன் உடலை மதுரைக்கு கொண்டு வர வேண்டும்

மதுரை, நவ. 19:  நியூசிலாந்தில் இறந்த தனது மகனின் உடலை மதுரைக்கு கொண்டு வருவதுடன், இறப்பு குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி கலெக்டரிடம் தந்தை மனு அளித்தார். மேலூர் அருகே மேலவளவு அழகாபுரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (63). இவர் நேற்று கலெக்டர் வினய்யிடம் கொடுத்த மனுவில், ‘எனக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 2வது மகன் பாலமுருகன் (34). பத்தாம் வகுப்பு படித்தவர். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த பிப்.2ம் தேதி சமையல் வேலைக்கு நியூசிலாந்து நாட்டிற்கு சென்றார். அங்கு கிறிஸ்ட் சர்ஸ் சென்ட்ரல் சிட்டி நகரில் உள்ள கொழும்பு ரோட்டில் உள்ள பெர்மிட் ரோம் நிறுவனத்தில் சமையல் வேலை செய்து வந்தார். அவருக்கு ராணி என்ற மனைவியும், கவினாஸ்ரீ என்ற மகள் உள்ளனர். தினமும் அங்கிருந்து எங்களுடன் செல்போனில் பேசி வருவார்.

அதேபோல் நேற்று முன்தினம் காலையில் எங்களுடன் பேசினார். ஆனால், அன்று மாலை 6 மணிக்கு பாலமுருகன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் கூறினர். அவர் இறந்ததிற்கான காரணம் தெரியவில்லை. மேலும் அவர் வேலைபார்த்த நிறுவனமும் எந்த தகவலும் சொல்ல மறுக்கிறது. எனது மகன் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவரது உடலை மதுரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர், ‘இதுதொடர்பாக நியூசிலாந்து தூதரம் மூலம் நடவடிக்கை எடுக்க அரசிற்கு பரிந்துரை செய்தார். முன்னதாக மகன் இறந்த துக்கத்தால், கோரிக்கை மனு கொடுக்க வந்த முருகேசன் அழுது, மயங்கி கீழே விழுந்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : New Zealand ,Madurai ,
× RELATED நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக...