×

உலகம்பட்டி கிராமத்திற்கு தண்ணீர் வராததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்

திண்டுக்கல், நவ.19: திண்டுக்கல் அருகே உள்ள உலகம்பட்டி கிராமத்திற்கு 10 ஆண்டுகளாக தண்ணீர் வழங்காததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊர் பொது மக்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, திண்டுக்கல் மாவட்டம், அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட உலகம்பட்டி பிரிவு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் இன்றி தவித்து வருகிறோம். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும், பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக புதிதாக ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து மோட்டார் பொருத்தி தண்ணீர் வினியோகம் செய்யவில்லை. எனவே தண்ணீர் இன்றி 10 ஆண்டுகளுக்கு மேலாக சிரமப்பட்டு வருகிறோம்.

அதனால் தண்ணீர் வழங்க கோரியும், மேலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட வினியோகம் குழாயை விரிவுபடுத்தி தண்ணீர் கொடுக்க வேண்டும். மேலும் நிரந்தர தீர்வாக ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பொருத்தி தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியபின், ஊர் மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் ஊர் பொதுமக்கள் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகள் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க முடியும்  என்று கூறியதால் பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதை தொடர்ந்து போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் தரப்பிலிருந்து ஐந்து பேர் மட்டும் மனு அளிக்க சென்றனர்.

Tags : Protests ,collector ,
× RELATED ரயில்கள் மீது கல்வீசி பாமகவினர்...