×

காட்டு யானை விரட்டியதால் வனத்துறையினர், விவசாயிகள் படுகாயம்

பட்டிவீரன்பட்டி, நவ. 19: யானையை விரட்ட சென்ற வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் உட்பட 7 படுகாயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களங்கொம்பு, கும்பம்மாள்பட்டி, நல்லூர்காடு, கவுச்சிகொம்பு, ஆடலூர், பெரியூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காபி, வாழை, ஆரஞ்சு, சவ்சவ், அவரை, பீன்ஸ், போன்ற பயிர்கள் பயிடப்பட்டு வருகின்றன. இந்த மலைப்பகுதியில் தொடர்ந்து காட்டுயானைகள் முகாமிட்டு பட்டாகாடுகளில் உள்ள பயிர்களையும், ஊருக்குள் உள்ள வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன.
கடந்த வாரம் பெரும்பாறை அருகே உள்ள நல்லூர்காடு பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள்(68) என்ற மூதாட்டியை காட்டு யானை தாக்கியதில் பலியானார். இதுவரை காட்டுயானை தாக்கி 10க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வத்தலக்குண்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட தாண்டிக்குடி பகுதியில் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் இணைந்து தாண்டிக்குடி அருகேயுள்ள பெருங்கானல் பகுதியில் யானையை விரட்டுவதற்காக சென்றுள்ளனர். அப்போது காட்டுயானை திருப்பி விரட்டியதில் வனகாவலர் நாகராஜ், வேட்டைத்தடுப்பு காவலர் முத்துச்சாமி மற்றும் விவசாயிகள் ரமேஷ், முத்துப்பாண்டி, தங்கவேல், கணேசன், முத்துராமன் ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 7 பேரும் தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் கன்னிவாடி வனச்சரக பகுதியில் வனத்துறையினர் யானைகளை விரட்டுவதற்காக பட்டாசுகளை வனப்பகுதியில் வெடித்துள்ளனர். இதனால் மிரண்ட யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் திசை மாறி இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து விரட்டுவதை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் போதிய உணவு மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்துதல், சோலார் வேலி அமைத்தல் போன்ற பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதனைவிடுத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் வனப்பகுதியில் கூடுகட்டி வாழும் பறவை போன்ற உயிரினங்கள் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்