×

பட்டிவீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டியில் சமுதாய கூடத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையம்

பட்டிவீரன்பட்டி, நவ. 19: பட்டிவீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டியில் சமுதாய கூடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதனால் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி பேரூராட்சியில் உள்ளது எம்.வாடிப்பட்டி. இங்கு கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் வத்தலக்குண்டு ரோட்டில் பெருமாள்கரடு அடிவாரத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம் திறக்கப்பட்டது. ஏழை எளியவர்கள் தங்களது வீட்டு விஷேகங்களை மிக குறைந்த வாடகையில் நடத்துவதற்காக கட்டப்பட்டதே சமுதாயக்கூடம். இந்த சமுதாய கூடத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. தற்காலிக ஏற்பாடாக மாற்று கட்டிடம் கட்டப்படும் வரை ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையம், நிரந்தர கட்டிடம் கட்டப்படாததால் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாயக்கூடத்தில் வருகிறது.

இந்த சமுதாய கூடத்தில் திரைகள் அமைக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மணமகன் அறை நோயளிகளை பார்க்கும் மருத்துவர் அறையாக உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சமுதாயக்கூடத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைகாக வந்து செல்கின்றனர். இங்கு போதிய வசதி இல்லாததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சமுதாயக்கூடம் தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வரும் காரணத்தினால் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீட்டு விஷேசங்களை தனியார் மண்டபங்களில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எம்.வாடிப்பட்டியில் சமுதாய கூடத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட நிர்வாகம் புதிதாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : community hall ,Primary Health Center ,Pattiviranpatti ,M Vadipatti ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு