×

சிறுமிக்கு அமில கலவையை கொடுத்த வழக்கில் பொள்ளாச்சி வைத்தியரை கைது செய்ய தனிப்படை திணறல்

திருப்பூர், நவ.19: திருப்பூரில் சிறுமிக்கு கொல்லிமலை மூலிகை எனக்கூறி அமில கலவையை கொடுத்த பொள்ளாச்சி சித்த வைத்தியரை கைது செய்ய முடியாமல் தனிப்படையினர் திணறி வருகின்றனர். திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (47). இவரது மகளுக்கு உடலின்  சில பகுதிகளில் மருகு உருவாகியுள்ளது.  தனபாலின் நண்பர் கூறிய ஆலோசனையின்படி பொள்ளாச்சியை சேர்ந்த சித்த மருத்துவர் மருகு மகேந்திரனிடம் சிகிச்சைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அதற்கு அவர் வீட்டிற்கே நேரில் வந்து சிகிச்சை கொடுப்பதாக கூறி கடந்த ஜீன் மாதம் 16ம் தேதியன்று  வீட்டிற்கு வந்து தான் கவரில் கொண்டு வந்த மூலிகை போன்ற பொருட்களை கொடுத்துள்ளார். இதனை 15 லிருந்து 20 நாட்களுக்கு உபயோகப்படுத்தினால் மருகு விழும் எனவும் கூறியுள்ளார். அந்த மருந்தை தனபாலன் தனது மகளுக்கு கொடுத்துள்ளார். நாளடைவில் அந்த மருந்தை உபயோகப்படுத்திய இடத்தில் கடுமையான புண்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் அதிகப்படியான வீக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது மூலிகை அல்ல. மூலிகை என்ற பெயரில்  திருநீரு, காஸ்டிங் சோடா,

ரெட் ஆசிட், தூஜா போன்ற ரசாயன அமில கலவையை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமி தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சித்த  மருந்து  எனக்கூறி போலியான அமில கலவையை  கொடுத்து ஏமாற்றி விட்டதாக கூறி தனபாலன் கடந்த மாதம்  முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு  கொடுத்துள்ளார்.  அந்த புகார் குறித்து விசாரிக்கும்படி வேலம்பாளையம் போலீசாருக்கு உத்தரவு வந்துள்ளது. புகாரின் பேரில் போலீசார் மருகு மகேந்திரனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஆனால் வைத்தியர் குறித்த எந்த ஒரு விபரமும் கிடைக்காமல் தனிப்படை திணறி வருகிறது. இது குறித்து தனிப்படை எஸ்.ஐ. கந்தர்மணியிடம் கேட்டபோது, மருகு மகேந்திரனை பல
நாட்களாக பல இடங்களில் தேடி வந்தோம். பொள்ளாச்சியில் இருப்பதாக கூறினார்கள். அங்கும் சென்று தேடினோம். ஆனால் அவர் சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது எனக் கூறினார்.

Tags : doctors ,Pollachi ,doctor ,
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு