போதிய நிதி வசதியில்லாமல் அவதி கறிக்கோழி வளர்க்க கிலோவுக்கு ரூ.25 கூலி வழங்க வேண்டும்

திருப்பூர், நவ.19:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கறிக்கோழி பண்ணையாளர்கள் போதிய நிதி வசதியில்லாமல்  அவதிப்படுகின்றனர். கோழி வளர்க்க தங்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.25 வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை பகுதி விவசாயிகள் விவசாய பணிகளைத் தொடர்ந்து கறிக்கோழி வளர்ப்பில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர்.  கறிக்கோழி உற்பத்தியாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கறிக்கோழி வளர்க்க பண்ணைகள் அமைத்துக்கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கழிக்கோழி பண்ணைகளில் 15 லட்சம் கறிக்கோழி வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்கள் மட்டுமே இறைச்சி விற்பனை குறையும். இதற்காக கறிக்கோழி உற்பத்தியாளர்கள் முன்கூட்டியே பண்ணைகளுக்கு குஞ்சுவிடுவதை குறைத்துக்கொள்கின்றனர். கறிக்கோழிகளுக்கு நோய் தாக்காமல் இருக்க அதிகளவு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. கறிக்கோழி உற்பத்தியாளர்கள் குறுகிய ஆண்டுகளில் பொருளாதார நிலையில் நல்ல வளர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால், இவர்களின் உயர்வுக்கு காரணமாக உள்ள கறிக்கோழி வளர்க்கும் பண்ணையாளர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கி வருகின்றனர். இறைச்சிக்கோழி வளர்க்க ஒரு கிலோவுக்கு ரூ.25 கூலி வழங்கினால் மட்டுமே குஞ்சுகளுக்கு போதிய சூடு அளிக்க மரக்கரி கொள்முதல், மின் கட்டணம், தண்ணீர், பராமரிப்பு கூலி என செலவு தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து பண்ணைகளை நடத்த முடியும். ஆண்டுக்கு 10 மாதங்கள் கறிக்கோழி விற்பனை அமோகமாக இருக்கும் நிலையில் தற்போது பண்ணை கறிக்கோழி ஒரு கிலோ ரூ.96 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.160 முதல் ரூ.170 வரை விற்கப்படுகிறது. கறிக்கோழி வளர்க்கும் பண்ணையாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டுமென பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளரும் தமிழக கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து  கூறியதாவது.

கறிக்கோழி வளர்ப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுள்ளோம். கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ 12 வரை கூலியாக கொடுக்கின்றனர். இது போதுமானதாக இல்லை. மரக்கரி, மின் கட்டணம், தண்ணீர், பண்ணை மராமத்து பணிகள், கோழி பராமரிக்க தினக்கூலி என வளர்ப்பு செலவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வழங்கும் கூலி போதுமானதாக இல்லை. ஆண்டுக்கு 5 முறை குஞ்சு விட்ட நிறுவனங்கள் 2, 3 முறை மட்டுமே விடுகின்றனர். இதனால், பல லட்சம் செலவிட்டு பண்ணை அமைத்தும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. கறிக்கோழி உற்பத்தியாளர்களே பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விலைக்கு வாங்கி வடமாநில தொழிலாளர்களைக்கொண்டு கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளதால் எங்களுக்கு முறையாக குஞ்சுகள் விடுவதை குறைத்துக்கொண்டனர். கறிக்கோழி உற்பத்தியாளர்களை நம்பி பல லட்சம்
செலவிட்டு பண்ணை அமைத்துள்ளோம். கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தங்களுடைய பண்ணைகளில் கறிக்கோழி வளர்ப்பை தவிர்க்க வேண்டும். ஒரு கிலோவுக்கு ரூ.25 கூலி வழங்கவேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Awadi ,
× RELATED குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு...