×

அதிவேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் விபத்து அபாயம்

திருப்பூர், நவ.19:திருப்பூரில் முக்கிய சாலைகளான பல்லடம், தாராபுரம், காங்கயம், அவிநாசி ஆகிய சாலைகளில் தினமும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. திருப்பூரில் இருந்து அவினாசிக்கு அதிக அளவில் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. அரசு பஸ்களுக்கு இணையான அளவில் தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன.திருப்பூர்-அவினாசி சாலையில் செல்லும்போது வழியோர நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கும் தனியார் பஸ்கள், அதனால் ஏற்படும் தாமதத்தை ஈடுசெய்ய அதிக வேகத்தில் செல்கின்றனர். இவர்களின் கண்மூடித்தனமான வேகத்தால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கலக்கமடைவதோடு, சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூரில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் மாநகராட்சி வளைவு, ரயில் நிலையம், புஷ்பா தியேட்டர், குமார் நகர், காந்தி நகர், பெரியார் காலனி, அனுப்பர்பாளையம், பூண்டி ஆகிய பஸ் ஸ்டாப்கள் உள்ளன.

அவினாசி-திருப்பூர் சாலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயக்கப்படுகிறது. ஆனால், காலை நேரங்களில் அவ்வழியாக போதிய பஸ்கள் இல்லாததால், அங்கு வரும் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமான பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. மேலும், அதிவேகமாக வரும் தனியார் பஸ்கள், ரோட்டில் செல்லும் டூவீலர்கள், பாதசாரிகளின் நிலையை நினைத்து பார்ப்பதில்லை. முன்னே செல்லும் வாகனங்கள் வழிவிட தாமதம் செய்தால், மோதுவது போல் வந்து பயம் காட்டுகின்றனர். இதனால் பஸ்சில் உள்ள பயணிகளும் பயப்படுகின்றனர். எனவே, முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார் நின்று வாகனங்களை சீர் செய்ய வேண்டும். வட்டார போக்குவரத்து துறையினர் கண்காணித்து அசுர வேக பஸ்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : accidents ,
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...