சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் போட்டி

கோவை, நவ:19: கோவையில் மாணவர்களுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த சைக்கிள் போட்டியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலைப்பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சைக்கிள் போட்டி நடந்தது. கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நேற்று காலை நடந்த இந்த போட்டியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மழலையர் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை  4 பிரிவுகளில் 500 மீ, 1 கி.மீ, 5 கி.மீ, ஆகிய தூரங்களில் போட்டிகள் நடந்தது. யுனைடெட் ரவுண்ட் டேபிள் ஏரியா 7 துணைத்தலைவர் பிரதீப் ராஜப்பா போக்குவரத்து விதிமுறைகள், பாதுகாப்பான பயணம் குறித்து விளக்கி பேசினார். மாணவர்கள் சாலை விதிகளை கற்றுக்கொள்ளும் வகையில் சிக்னல் விளக்குகள், ஜீப்ரா கிராசிங் மற்றும் போக்குவரத்து குறியீடுகள் போட்டி பாதையில் வைக்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் போட்டி