×

இத்தலாரில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை

ஊட்டி, நவ. 19: ஊட்டி அருகே இத்தலார் பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி 200க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 54 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டன. வாரந்தோறும் ஊட்டியில் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தின் போது ஏதாவது ஒரு கிராமத்தில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்து மதுக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் ஊட்டி அருகே இத்தலார் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 420க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதுதவிர இத்தலாரை சுற்றிலும் பெம்பட்டி, பேலிதளா, ேபார்த்தி, கோத்தக்கண்டி உள்ளிட்ட கிராம பகுதிகள் உள்ளன. இக்கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இத்தலார் பகுதியில் அரசு, தனியார் பள்ளிகள், கூட்டுறவு சங்கங்கள், தேயிலை தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன.

இந்நிலையில், இத்தலார் பஜாரில் குடியிருப்புகளுக்கு மத்தியில், நெடுஞ்சாலையில் இருந்து 1 மீட்டர் தூரத்தில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுக்கடை மற்றும் பாரால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இங்கு மது அருந்த கூடிய குடிமகன்கள் மதுபாட்டில்களை பொது இடங்களில் வீசி எறிவது, விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வர கூடிய டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பல முைற கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இத்தலார் சுற்று வட்டார கிராம மக்களை ஒருங்கிணைத்து டாஸ்மாக் கடையை அகற்றும் குழு அமைத்துள்ளனர். இந்நிலையில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இத்தலார் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஊட்டி டவுன் டி.எஸ்.பி., சரவணன், ஜி1 இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் அவர்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தினர். அப்போது இத்தலாரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை தொடர்பாக ஒருவாரத்தில் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுைகயில், ‘‘இத்தலார் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். இக்கடைகயை அகற்ற கோரி கடந்த இரு ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்,’’ என்றனர்.

Tags : blockade collector ,removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...