×

ரஜினிகாந்த் கருத்து குறிப்பிட்ட நபருக்கு எதிரானது அல்ல

கோவை, நவ.19:  அரசியல் நிலையற்ற தன்மையை கூறும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளது குறிப்பிட்ட நபருக்கு எதிரானது அல்ல என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 83வது நினைவு நாளையொட்டி கோவை சிறையில் உள்ள செக்கு மற்றும் அவரது உருவ படத்திற்கு பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் கூறியது; தமிழகத்தை பொறுத்தவரை சினிமா கலைஞர்கள், அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பவர்கள் மீது மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். யார் முதல்வராவது என்பது யார் கையில் இருக்கிறது என்ற அர்த்தத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலில் எந்த நேரத்தில் எந்த பொறுப்பு, யாருக்கு வருமென தெரியாது, நீண்ட காலம் பணியாற்றி மக்களோடு தொடர்புடையவர்களுக்கு அரசியல் இடமுண்டு. அரசியல் நிலையற்ற தன்மையைக் கூறும் வகையில் முதலமைச்சர் குறித்து ரஜினி கூறியுள்ளார். அது குறிப்பிட்ட நபருக்குஎதிரானது அல்ல. அரசியலில் எந்த ஒரு அதிசயமும் நிகழும். வரும் சட்டமன்ற தேர்தல் எப்படி அமையுமென்பதை காலம்தான் சொல்ல வேண்டும். தேர்தல் போட்டியிடுவது மற்றும் கட்சி பற்றி ரஜினிகாந்த்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். தமிழக அரசியலில் வெற்றிடம் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்பது பா.ஜ.க. கருத்து. வெற்றிடம் இல்லை என்பது அதிமுக கருத்து, என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Tags : Rajinikanth ,
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...