×

சாய கழிவுநீரை வெளியேற்றிய 4 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு, நவ. 19:   ஈரோடு பகுதிகளில் சாய கழிவுநீரை வெளியேற்றிய 4 தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளை மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் துண்டித்துள்ளனர். ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாயம், சலவை, பிரிண்டிங் மற்றும் தோல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சாயம், சலவை, தோல் தொழிற்சாலைகள் பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலை கழிவுநீரை மீண்டும் பயன்படுத்தி வருகிறது. பிரிண்டிங் தொழிற்சாலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதில் சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்கும் வகையில் ஈரோடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மூலம் பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக பராமரிக்காமல், கழிவுநீரை கால்வாயில் வெளியேற்றும் தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.  தற்போது இந்த கண்காணிப்பினை துரிதப்படுத்த வட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் கலப்பதை தடுக்க இரவு நேரங்களில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு சாய கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று தண்ணீர்பந்தல் பாளையம், சூரம்பட்டிவலசு, பெரிய அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியது தொடர்பாக 2 சலவை தொழிற்சாலைகள், ஒரு அச்சு தொழிற்சாலை, ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலை என 4 ஆலைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. எனவே சாயம், சலவை, தோல் தொழிற்சாலைகள் பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், பிரிண்டிங், சைசிங் தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு நிலையத்தையும் முறையாக இயக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுநீர், திடக்கழிவுகளை நீர்நிலைகளில் விதிகளை மீறி வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : plants ,
× RELATED வெடிகளில் வளரும் செடிகள்!